குழந்தை வளர்பிற்க்கான 20 டிப்ஸ்

1. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், “Good touch”, “bad touch” எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.

2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.

3. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.

4. முக்கியமாக குழந்தைகள் 10 வயதை அடையும்போது செக்ஸ் என்றால் என்ன என்பதை அப்பா/அம்மா இருவரும் சேர்ந்து உட்கார்ந்து சொல்லிகொடுங்கள், புரியவையுங்கள்… நீங்கள் சொல்லிகொடுக்கும் போது அது தவறாக மாறாமல் அதனை புரிந்து எங்கு எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்றும் யாரேனும் தவறாக நடந்து கொள்ளும் போது உங்களிடம் வந்து தெரிவிக்கும் பழக்கமும், உங்களின் மீது நன் மதிப்பும் வளரும்…….

5. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது.

6.ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்!

7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்

8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.

9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்!

10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.

11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்!

12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல், குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ, அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும் வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.

13. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.

14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்!

15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.

16.குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள். சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம்.

17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.

18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!

19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள். பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!

20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள்.  ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல!

-Aravindan Ganesan

Head- Social Work,

Academics & Public Relations

Athma Hospitals

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *